உயர் தரத்துக்குப் பின்னான உயர் கல்வி
கவனத்துடன் அணுகவேண்டியது காலக் கடமை
இ.சர்வேஸ்வரா
விரிவுரையாளர்
கல்வியியல் துறை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
உயர்தரப் பாடத் தெரிவின் அவசியம்
கடந்தவாரம் உயர்கல்வியின் அவசியம் குறித்தும் எமது பிரதேச மாணவர்கள் உயர்கல்வி குறி;த்து கொண்டுள்ள விழிப்புணர்வு மற்றும் வாய்ப்புக்களின் தன்மை குறித்தும் மேலோட்டமாக சில விடயங்களைக் பார்த்தோம். இவ்வாரம் உயர்தரத்துக்குப் பின்னாகவுள்ள உயர்கல்வி; வாய்ப்புக்களை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது தொடர்பில் சில அடிப்படையான விடயங்களைப் அறிந்து கொள்வது பொருத்தமானதாகவிருக்கும்.
உயர்தரத்துக்குப் பின்னான உயர்கல்வியைப் பெற்றுக்கொள்வதில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள்
1. க.பொ.த உயர்தரக் கல்விக்காக தெரிவுசெய்யும் கற்கை நெறிகள் மற்றும் பாடத்தொகுதிகள்
2. க.பொ.த உயர்தரப் பரீட்சையில் பெற்றுக்கொள்ளும் பெறுபேறு
3. க.பொ.த உயர்தரப் பரீட்சையில் பெற்றுக்கொள்ளும் Z-புள்ளி
4. க.பொ.த உயர்தரப் பரீட்சையில் பொது விவேகப் பரீட்சையில் பெற்றுக்கொள்ளும் புள்ளிகள்
5. க.பொ.த சாதரணதரப் பரீட்சையில் ஆங்கிலம் மற்றும் கணித விஞ்ஞானப் பாடங்களில் பெற்றுக்கொள்ளும் பெறுபேறு
6. க.பொ.த உயர்தரத்தில் குறித்த சில பாடங்களில் பெற்றுக்கொள்ளும் பெறுபேறு
இவ் விடயங்கள் குறித்து சற்று ஆழமாக ஆராய்வது அவசியமானது. ஏனெனில் இவ் விடயங்கள் தொடர்பான பல்வேறு தெளிவற்ற புரிதல்கள் நம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் உண்டு.
க.பொ.த உயர்தரக் கல்விக்காக தெரிவுசெய்யும் கற்கை நெறிகள் மற்றும் பாடத்தொகுதிகள்
உயர்தரத்துக்குப் பின்னான உயர்கல்வியைத் தீர்மானிக்கும் பிரதான காரணியாகத் திகழ்வது க.பொ.த உயர்தரத்தில் தெரிவுசெய்யும் பாடச்சேர்மானங்களே ஆகும். இது பல வழிகளில் தீர்மானிக்கும் காரணியாக அமைகின்றது. குறிப்பாக
1. பரீட்சையில் சித்தியடைதல்
2. Z பள்ளியின் அளவு
3. பல்கலைக்கழக மற்றும் கல்வியியல் கல்லூரி உட்பட்ட உயர்தரத்துக்குப் பின்னான கல்விக்கான தெரிவுகள் மற்றும் வாய்ப்புக்கள்
என்பவற்றை தீர்மானிக்கும் காரணியாக அமைவது உயர்தரத்தில் தெரிவு செய்யும் பாடத்தொகுதிகளின் சேர்மானமே. எனவே இவ் விடயம் குறித்து சற்று ஆழமாக ஆராய்வது அவசியமானது.
பாடத்தெரிவுகள் குறித்து ஆராயும் போது தேவை கருதியும் தவிர்க்க முடியாதும் கட்டுரைத் தொடர் நீண்டதாக அமையவாய்ப்புள்ளதுடன் அவ்வப்போது ஒன்றைத் தொட்டு இன்னொரு விடயத்துக்கு தாவவேண்டிய தேவையும் ஏற்படும் என்பதையும் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும்.
2000ம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்ட இலங்கையின் கல்வி முறைமையின் படி 2000ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையிலிருந்து இன்று வரை க.பொ.த உயர்தரத்துக்கு மாணவர்கள் பிரதானமாக மூன்று பாடங்களுக்குத் தோற்றியிருக்க வேண்டும். இப் பாடங்கள் பின்வரும் பிரதான கற்கைத் துறைகளைச் சார்ந்துள்ளன.
1. கணித உயிரியல் விஞ்ஞானத் துறை
2. கலைத் துறை
3. வர்த்தகத் துறை
4. தொழில் நுட்பத் துறை – இதனுள் உயிர் முறைமைகள் தொழில்நுட்பம் மற்றும் இயந்திரவியல் தொழில்நுட்பம் என இரு வகுதிகள் உண்டு.
இக் கற்கைநெறிகளுக்குள் பல பாடங்களைத் தெரிவுசெய்யும் வாய்ப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இருந்தும் எமது பிரதேசங்களில் பாடத்தெரிவுகளில் மாணவர்களிடம் ஒரு பொதுவான போக்கே காணப்படுகின்றது. குறிப்பாக கணிதப் பிரிவில் கல்வி கற்கும் மாணவர்கள் இணைந்த கணிதம், இரசாயனவியல் மற்றும் பௌதிகவியலையும் உயிரியல் பிரிவில் கல்வி கற்கும் மாணவர்கள் உயிரியல், இரசாயனவியல் மற்றும் பௌதிகவியலையும் தெரிவு செய்து கொள்ளும் வழமையே உண்டு. நம் யாழ்ப்பாண மரபில் ஊறிப் போன வைத்தியர் மற்றும் பொறியியலாளர் எனும் கனவுகளின் தாக்கமே இப் பாடத் தெரிவுக்கு காரணமாகவுள்;ளது. ஆனால் இத் துறைகளுக்குகான அனுமதி மட்டுப்படுத்தப்பட்டதாகவும் அதிக போட்டித்தன்மைமிக்கதாகவும் இருப்பது மிகவும் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய விடயம். கணித விஞ்ஞானத் துறைகளில் கல்வி கற்கும் குறித்த தொகை மாணவர்கள் மேற்குறிப்பிட்ட பாடங்களில் ஒரு சில பாடங்களில் மிகவும் பின்தங்கிய அடைவு மட்டங்களைப் பெற்றுக்கொள்கின்றமையை க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குப் பின் பரீட்சைத் திணைக்களம் ஒவ்வொரு பாடங்களுக்கும் என தனித்தனியாக வெளியிடுகின்ற புள்ளிவிபரங்களிலிருந்து அறியக்கூடியதாகவுள்ளது.
கலைத்துறையுடன் ஒப்பிடுகையில் பாடத் தெரிவுக்கான வாய்ப்புக்கள் கணித விஞ்ஞானத் துறைகளில் குறைவாகவிருந்த போதும் இருந்தும் மாணவர்கள் சில மட்டுப்படுத்தப்பட்ட வகையில் பாடங்களை தெரிவு செய்வதற்கான வாய்ப்புக்கள் கணித விஞ்ஞானத் துறையில் உண்டு. உதாரணமாக பௌதிகவியல் பாடத்தில் இடர்படும் ஓர் உயிரியல் பிரிவைச் சேர்ந்த மாணவன் பௌதிகவியலைத் தவிர்த்து அதற்குப் பதில் விவசாய விஞ்ஞானத்தை தெரிவுசெய்ய முடியும். அது போன்று இரசாயனவியலில் இடர்படும் கணிதத் துறை மாணவர்கள் இரசாயனவியலுக்குப் பதில் உயர் கணிதம் எனும் பாடத்தை தெரிவு செய்ய முடியும். இது போன்று தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடத்தை தெரிவுசெய்வதன் மூலமாகவும் பாடத்தெரிவுகளை மேற்கொள்ளலாம். இவ்வாறு பாடத்தெரிவுகளை மேற்கொள்ளும் மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கான தேசிய மற்றும் மாவட்ட தரநிலைப்படுத்தலில் ஓர் விசேட தொகுதியினராகக் கணிக்கப்படுவதுண்டு. சில சந்தர்ப்பங்களில் அவர்களுக்கான Z புள்ளிகள் மட்டும் வெளியிடப்படுவதுடன் தேசிய மற்றும் மாவட்ட நிலை என்பன வெளியிடப்படுவது கிடையாது. அத்துடன் இந் நிலை அவர்களது பல்கலைக்கழக வாய்ப்பையோ அல்லது வேறு உயர் கல்வி வாய்ப்புக்களையோ பாதிக்காது என்பதையும் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.
அத்துடன் மேற்குறிப்பிட்ட பாடத்தெரிவுகளுக்கு அப்பால் மாணவர்கள் தமது வாழ்க்கை இலட்சியம் மற்றும் குறிக்கோள்களின் அடிப்படையிலும் பாடத்தெரிவுகளை மேற்கொள்ள முடியும். உதாரணமாக கணிதத்துறையில் கல்வி பயிலும் சில மாணவர்களிடம் உரையாடும் போது அவர்கள் தமது எதிர்காலக் தொழில்துறை சார் கனவு ஒரு கட்டடக் கலைஞராக (Architect) வருவது எனக் குறிப்பிடுகின்றார்கள். அத்தகைய கனவைக் கொண்டவர்கள் வழமையான கணிதத் துறை பாடத்தொகுதிகளுக்குள் தமது தெரிவுகளை மட்டுப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. அவர்கள் விசேடமாக தெரிவுசெய்யப்பட்ட சில பாடங்களைக் கற்பதன் மூலமாக அவ்விலக்கை இலகுவாக அடைந்து கொள்ள முடியும். ஆனாலும் இத்தகைய முயற்சிகளை எடுக்கும் எமது மாணவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவானதே. அதற்கான காரணம் ஒரு வேளை தாம் இலட்சியமாகக் கருதும் பாடத்துறைக்கான அனுமதி கிடைக்காத பட்சத்தில் ஏனைய துறைகளைத் தெரிவு செய்வதில் தமக்கு பெரும் சவாலாக பாடத்தெரிவுகள் அமைகின்றன என்பதேயாகும்.
இவ்வாறான மாணவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். உங்களுடைய இலட்சியத்தை அடைவதற்கான பாதை ஒன்று தான் உண்டு என ஒரு போதும் எண்ணாதீர்கள். குறிப்பாக கட்டடக்கலைஞராகுவதற்கு மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தின் அனுமதியை மட்டும் தான் பெறவேண்டும் என்றில்லை. வேறு பல மார்க்கங்களும் உண்டு. உதாரணமாக புலமைப்பரிசில்களைப் பெற்றுக்கொள்வதன் மூலமாக வெளிநாடுகளில் இக் கல்வியைப் பயில வாய்ப்புக்கள் பல காத்திருக்கின்றன. உதாரணமாக இந்திய அரசின் கலாசரா உறவுகளுக்கான மத்திய நிலையம் Indian Council for Cultural Relations (ICCR) வழங்கும் புலமைப்பரிசில்களுடாக இத் துறையை கற்க பல வாய்ப்புக்கள் தங்களுக்கு உண்டு. இவற்றை நீங்கள் பயன்படுத்த வேண்டும். மனமுண்டானால் மார்க்கமுண்டு.
பாடத்தெரிவுகள் குறித்து மேலும் பல விடயங்களை ஆராய வேண்டியுள்ளது. அடுத்து வரும் சில வாரங்கள் இவ் விடயங்கள் தொடர்பான சில முக்கிய விடயங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்.
(தொடரும்)