இனியும் முட்செடிகள் முளைக்கலாம். (சிறுகதை)

 

இனியும் முட்செடிகள் முளைக்கலாம். (சிறுகதை)

(இக்கதை பரிசு பெற்ற மூலக்கதையிலிருந்து மீள்வடிவமைக்கப்பட்டது)

‘ தம்பி! இனியும் பிரிவினையும் வேற்றுமையும் பேசித்திரிஞ்சு பிரயோசனமில்லை. அவங்கள் மட்டும் இனவாதம் பேசயில்லை. அவங்கள் மொழிச்சட்டம் கொண்டு வந்து இனவாதம் பேசின மாதிரி எங்கடை ஆக்களும் நாட்டைப்பிரிப்பம், எல்லை போடக் கிளுவங்கதியால் தாருங்கோ எண்டு பேசி சனத்தை உசார்படுத்தி விட்டதின்ரை பலன்தான் எங்களை இண்டைக்கு சாம்பல் மேட்டிலை கொண்டுவந்து விட்டிருக்குது . இனியெண்டாலும் இந்தக் கதையளை விட்டிட்டு சேர்ந்து போனாத்தான் எங்கடை சனத்துக்கு ஏதாவது கிடைக்கும். வாய்ப்புக்கிடைச்சால் நில்லும். அதாலை நாலு சனத்துக்கு நல்லது செய்யமுடிஞ்சால் செய்யும். இதிலை சரி பிழை யோசிக்கிறதுக்கு ஒண்டும் இல்லை.’

என்ற குலசேகரத்தாரின் பேச்சில் யதார்த்தம் இருப்பதாகப்பட்டது. கடந்த இரண்டு வாரங்களாக சரியென்றும் பிழையென்றும் மனம் அல்லாடிய விடயத்தில் ஒரு தெளிவு கிடைத்தது போல இருந்தது.

எங்களை இண்டைக்கு சாம்பல் மேட்டிலை கொண்டுவந்து விட்டிருக்குதுஎன்பது எத்தனை சத்தியமான, நிஜமான வார்த்தைகள். போர் தந்த வலிகளை இதனை விட சுருக்கமாக, தெளிவாக எப்படிச் சொல்லமுடியும்.

போர் எவ்வளவு கொடுமையானது, எவ்வளவு வலி தரக்கூடியது என்பதை நான் நேரில் தரிசித்தவன் என்பதால், போர் என்பதை செய்திகளாக படித்துப் பார்த்து விட்டு எங்கள் உரிமைகளை மீட்க இன்னொரு போர் வேண்டும் என்று கூறும் நம்மவர்களைப் பார்க்கின்ற போது வேதனையாகவும் பரிதாபமாகவும் இருக்கும்.

கண் முன்னே இறந்துபோன உறவுகளின் உடல்களைக் கூடத் தகனம் செய்ய முடியாமல், தமக்குப் பின்னால் நாய்கூட எஞ்சாது என்ற நம்பிக்கையில், மணலை வாரி மூடிவிட்டு உயிருக்கு அஞ்சி ஓடியவர்களையும், தாய் இறந்தது அறியாது இறந்த தாயிடம் பால் குடித்த குழந்தையையும், கர்ப்பிணித் தாயும் நிறைமாத சிசுவும் அருகிலேயே கணவரும் துடிதுடித்து இறந்ததைதையும் நேரில் கண்ட என்னைப் போன்றவர்களால் இங்கு மட்டுமல்ல, உலகின் எந்த மூலையில் போர் நடந்தாலும் இனிமேல் ஆதரிக்க முடியாது.

இரண்டாயிரத்து ஒன்பதின் வைகாசி. வாழ்வின் இறுதியிலும் இறுதியான நாட்கள். ஊழித்தாண்டவத்தின் உச்சம். இமயமலை என்று நாங்கள் அண்ணாந்து பார்த்திருந்த பல விடயங்கள் கண்முன்னே பனிமலையாய் கரைந்து போக, சோகத்தையும், வாழ்வின் அத்தனை அங்கங்களும் உறவுகளும்  பிடுங்கி எறியப்பட்ட காயத்தையும் சுமந்தபடி, மரத்துப்போன மனதோடு உயிர்மீண்டு, புனர்வாழ்வு முடிந்து வீடு வந்தபோது, மீளமுடியாத நரகத்தில் சிக்கிக்கொண்டது போன்ற பிரமையும், இழக்க முடியாத, இழக்கக் கூடாத மிகப்பெறுமதியான ஏதோ ஒரு பொக்கிஷத்தை இழந்து விட்டதான தவிப்பும், ஒரு ஏக்கமும், மனதில் முள்ளாக உறுத்தியது.

முன்னாள் போராளி என்ற காரணத்திற்காகவே எல்லோரும் என்னைப்பார்க்கவும் பேசவும் தயங்கிய — சமூகத்தால் ஓரங்கட்டப்பட்ட, அந்த நாட்களில் என்னோடு பேசிய குடும்ப அங்கத்தவர் அல்லாத முதல் மனிதர் குலசேகரம். இந்த நான்கு வருட காலத்திற்குள் என்னை சமூகச் செல்வாக்குள்ள மனிதனாக அடையாளப்படுத்தியதில் குலசேகரத்தாரின் பங்களிப்பு மிக அதிகம். குலசேகரத்தாரின் அறிமுகமும்; ஒருமாறுதலையும் ஆறுதலையும் எதிர்பார்த்த என் உள்மனத் தேவையும் ஒன்று சேர கோயில் தொண்டர்சபை, சனசமூகநிலையம், என்று பொது அமைப்புக்களுடன்; தொடர்பும் அறிமுகமும் வளர்ந்தது.

ஒருகாலத்தில் என்னை அழிப்பதன்மூலம் அழிவை விதைப்பதற்கு என நான் கற்றுக்கொண்ட மொழியும், திறன்களும், செய்காரிய நேர்த்தியும் இப்போது ஆக்கபூர்வமான தேவைகளுக்குப் பயன்பட, பலரின் பிரமிப்பிற்கு உள்ளானதால் பல பொது அமைப்புக்களில் நிர்வாகப்பதவிகளும் ஊரில் செல்வாக்குள்ள இளைஞர் என்ற அந்தஸ்தும் கிடைத்தன. பொது வேலைகளில் ஈடுபடுவதற்கு அறிவு, திறன் கொண்ட பெரியவர்கள் பின்னிற்பதால் கிடைத்த  சமூக தலைமைத்துவ இடைவெளி குறுகிய காலத்தில்  என்னைப்பல விடயங்களில் முன்னிலை பெற வைத்தது. பல புதிய அறிமுகங்களும், இப்போது அரசியல் பிரவேசத்திற்கான அழைப்பும் கிடைத்தது.

விரோதத்தையும் பகைமையையும் விட்டுவிட்டு அபிவிருத்திக்காக ஜனநாயக அரசியல் வழிமுறையில் இணைந்து பணியாற்ற அருமையான சந்தர்ப்பம் என்று அவர்கள் சொல்வதையும்  மறுக்க முடியவில்லை. அப்படி இணைவது சரியென்றும் பிழையென்றும் மனம் அல்லாடிய விடயத்தை குலத்தார் தீர்த்து வைத்து விட்டது போல இருந்தாலும் மீண்டும் தடுமாற்றம் வராது என்பதற்கு உத்தரவாதமில்லை.

குலமண்ணை! காணாமல் போனவையின்ரை குடும்பங்கள், நாடுவேணும் எண்டு போராடின குடும்பங்கள், இண்டைக்கு ஒருவேளை சாப்பாட்டுக்காக போராடுதுகள். அதைவிட இன்னும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கடை வீடுகளுக்குப் போகேலாமல் வீடுகளைப்பிடிச்சு வைச்சிருக்கினம். எங்கடை சனத்தின்ரை தீராத பிரச்சனையள் இன்னும் கனக்க இருக்குது. இதுகளைத் தீர்க்கிறதுக்கு விரும்புகினமில்லைப்போலை கிடக்குது…….’         

மீண்டும் மனம் அலை பாய்ந்தது. தோற்றுப்போன மனநிலையும், அச்சமும், இன்னமும் மிச்சமிருந்தன.

தம்பி! சந்தேகமும் அவநம்பிக்கையும் உடனே தீராது. அது மெல்ல மெல்லத்தான் தீரும். அவைக்கும் நம்பிக்கை வரவேணும். அப்பிடி வந்தால் அவங்களும் தங்கடை வீட்டை போயிடுவாங்கள் நாங்களும் எங்கடை வீட்டை போகலாம். எல்லாம் உடனே வேணுமெண்டு அடம்பிடிச்சால் பிரச்சனை தீராது சந்தேகமும் பயமும்தான் கூடும். எங்கடை பொடியள், எங்கடை பொடியள் எண்டு சொல்லித்திரிஞ்ச ஆருக்கும் உண்மையிலை எந்த அக்கறையும் இல்லை. உங்களை மாதிரி அக்கறையோடை யோசிக்கிறவை இப்பிடிக் கிடைக்கிற சந்தர்ப்பங்களைப் பாவிச்சு அதுகளுக்கு ஏதாவது விடிவைத்தேடுங்கோ

குலத்தாரின் குரல் இப்போது கனத்திருந்தது. கடந்த காலத்தில் தவறிழைத்து விட்டோமோ? என்ற பச்சாத்தாபம் கலந்த ஏதோ ஒரு விபரிக்க முடியாத உணர்வுகளின் கலவை ஊற்றெடுத்து என்னை வேதனைப்படுத்தியது.

உண்மைதான், போராளிகள் ஒரு காலத்தில் தங்களுக்கு காவலாய் இருந்தவர்கள் என்றாலும் அவர்களை மக்கள் முட்செடிகளாகவே கருதுகிறார்கள், முற்றத்து மல்லிகையாக ஏற்பதில் தயக்கம் இருக்கிறது. பெற்றாரின் அன்பும், வளமான குடும்பப் பின்னணியும் எனது வாழ்க்கையை சவாலாக்கவில்லை. ஆனால் பல ஆண்டுகளாக மண்ணுக்காக போராடிய பலர் இன்று ஒருவேளை உணவுக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். உதவிகளுக்காக அரசிடம் கையேந்துகிறார்கள்.

யாருக்காகப் போராடினோமோ அவர்களால் புறக்கணிக்கப்பட்ட நிலையில் யாருக்கு எதிராகப் போராடினோமோ அவர்களால் ஆதரிக்கப்படுகின்றோம்என்பதை நினைக்க அவமானமாகவும் வேதனையாகவும்  இருந்தது.

எல்லாக்காலங்களிலும் இப்படி நடந்திருக்கிறது. எல்லாளனுடைய ஆட்சியில் இருந்த மக்கள் துட்டகைமுனு மன்னனான போது அவனை மன்னனாக ஏற்று மகிழ்ச்சியோடு வாழ்ந்திருக்கிறார்கள். யாரேனும் நாளை என்னைத் துரோகி என்று சொல்லலாம். ஆனால் ஆட்சியில் இருக்கின்ற மன்னனை நேசிப்பதும், அந்;த அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருப்பதும் மக்களின் தர்மம். அதனால்தான் மக்களை எல்லோருக்கும் பொதுவானவர்களாக கருதி பொது மக்கள் என்கிறார்கள். ……….. என்ற விதமாக சிந்திக்க, குலத்தார் சொன்னது சரியாகவே பட்டது.

 &&&&&                                                              &&&&&                                                 &&&&&

கனடாவில் இருந்து வந்திருந்த எனது அண்ணாவின் குடும்பத்துடன் அவர்கள் கனடா திரும்புவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பாக முழு இலங்கைக்கும் சுற்றுலா செல்வதெனவும் சுற்றுலா முடிவில் அவர்கள் கனடா திரும்புவதெனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அந்தத்தீர்மானம் செயல் வடிவம் பெற்றிருக்க நான்கு நாட்கள் இலங்கையின் பெரும்பாலான பகுதிகளை தரிசித்தோம்.

 ’எவ்வளவு அழகான நாடு, அமைதியாக இருந்தால் இதைவிட சிறந்த தேசம் உலகத்தில் இருக்க முடியாது அண்ணி ஆங்கிலத்தில் ஆதங்கப்பட்டாள்.

அனுராதபுரத்தில் எனது மொழியறிவு அதிகம் பயன்பட்டது. நான் சிங்களம் பேசுவது எனது குடும்பத்தில் பலருக்கு ஆச்சரியமாக இருந்தது. குறிப்பாக அண்ணியும், எனது தங்கையும் அதிசயமாகவும் பெருமையாகவும் பார்த்தார்கள். அங்கிருந்தவர்களிடம் சிங்களத்தில் விபரம் கேட்டு அண்ணனின் பிள்ளைகளுக்கு ஆங்கிலத்தில் விளக்கிச் சொன்னபோது, ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியையான அம்மா எனது ஆங்கிலத்தின் வேகத்தை பின்தொடர அதிகம் சிரமப்படுவது தெரிந்தது.

பெரிய பெரிய புத்தர் சிலைகளைப் பார்த்து அண்ணாவின் குழந்தைகள் அதிசயித்தார்கள் யார் இவர் என்று ஆங்கிலத்தில் விசாரிக்க, அம்மா புத்தர் ஞானம் பெற்ற வரலாற்றை கேள்வி வந்த மொழியிலேயே விபரிக்க இன்னும் அதிசயித்தார்கள்.

இவர்தான் எங்கடை காணியளைப் பிடிக்கிறவர் எண்டதையும் சொல்லுங்கோ

 அண்ணா அதிக நேரத்தின் பின் வாய் திறந்து பேசினான். பேச்சில் வெறுப்பிருந்தது.

அண்ணா புத்தர் தமிழுக்கோ, தமிழனுக்கோ விரோதியில்லை. உலகத்திலை பிறந்த ஞானிகளுக்குள்ளை புத்தரும், வள்ளுவரும், பெரியாரும் மட்டும்தான் சமயச் சார்பில்லாதவை. புத்தர் எந்தச்  சாமியையும் கும்பிடவும் இல்லை, தன்னைக் கும்பிடச் சொல்லவும் இல்லை. புத்தரை ஆரும் விரோதியாய் பாக்கலாம் ஆனால் தமிழன் பாக்கக்கூடாது. புத்தசமயத்தை வளர்த்தவன் தமிழன்தான். உனக்குத் தெரியுமே பௌத்த சமயத்துக்கு  மணிமேகலை எண்ட காப்பியம் செய்தவன் தமிழன்;. பௌத்தத்துக்கு அதைவிட்டால் கிடைக்கக்கூடியதாய் ஒண்டுமில்லை. கனபேர் அதைப் பழுதாக்கிப்போட்டங்கள் அதுக்குப் புத்தர் பொறுப்பில்லை

 பதில் சொன்ன என்னை அதிசயமான பிராணியைப் பார்ப்பது போல வாய்பிளந்து பார்த்தான்.

நீ எப்படா புத்த சமயத்திலை சேர்ந்தனிபுனர்வாழ்விலையே?’

அவனது கேள்விக்கு சிரித்த என்னை உறுத்துப் பார்த்தான், புத்தரை நேசிக்கின்ற ஒரு தமிழனைப் பார்க்க அவனுக்கு அபூர்வமாகவும் அதிசயமாகவும் இருந்தது.

உண்மையாவே சேர்ந்திட்டியோ ?

என்று மீண்டும் சிரித்தான். பௌத்தம் சிங்களவர்களின் மதம் எனவும் பௌத்த மதமும் புத்தர்சிலைகளும் தமிழர் மீதான ஆக்கிரமிப்பின் குறியீடுகளாகவும் அவர்கள் கொண்டிருந்த அபிப்பிராயம் சிரிக்க வைத்திருக்கலாம்.

சர்ச்சை அண்ணாவின் குழந்தைகளின் கவனத்தை ஈர்க்க அவர்கள் விடயமறிய ஆசைப்பட்டார்கள். அண்ணியிடமும் அவ்வளவாகத் தமிழ் புரியாத ஆதங்கம் தெரிந்தது.

தமிழர்கள் ஒரு காலகட்டத்தில் பௌத்தர்களாக வாழ்ந்தனர், இலங்கைத் தமிழர்களிடையேயும் புத்தர் அமைதியின் சின்னமாக அமர்ந்திருந்தார். தமிழர் பகுதிகளில் புத்த தூபிகள் இருப்பது அவை சிங்களவர்களுடையது என்பதற்கு சான்றல்ல. அவை தமிழர்களின் உடைமைகள். தமிழ் நாட்டில்கூட பல இடங்களில் புத்தர்சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதற்காக தமிழகத்தின் பூர்வீகக்குடிகள் சிங்களவர்களல்ல.

புத்தரின் முன்னால் நின்று பௌத்தத்தைப் பற்றி ஆங்கிலத்தில் விபரித்த போது குழந்தைகளிடமும், அண்ணியிடமும் கேட்கும் ஆர்வம் தெரிந்தது. அண்ணனிடம் முன்னைய ஏளனத்தைக் காணமுடியவில்லை. அருகில் இருந்த யாரோ இரு வெள்ளைக்காரர்கள் உன்னிப்பாகக் கேட்டார்கள், சுற்றுலா வழிகாட்டி என்று நினைத்திருக்க வேண்டும், விபரித்ததற்கு நன்றி சொல்லி பணம் எடுத்து நீட்டினார்கள். விடயத்தை சொன்னபோது சிரித்தபடி வருத்தம் தெரிவித்து விலகினார்கள்.

பயணத்தின் நிறைவு நாளில் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் அண்ணாவையும் குடும்பத்தினரையும் வழியனுப்பப் போனபோது தங்கையிடம் ஒருவித பரபரப்பு தெரிந்தது. ஏதோ அதிசயத்தைப் பார்ப்பது போல யன்னலுக்கு வெளியே தலையை நீட்டி அங்கிருந்த குடியிருப்புகளையும் கட்டடங்களையும் பார்த்தாள்.

இஞ்சை எயார்ப்போட்டைச் சுத்தி வீடுகள் இருக்குது, சனங்கள் இருக்குது,

ஏதோ உலக அதிசயத்தை விபரிப்பது போலப் பேசினாள்

ஓம் சனம் இருக்கிறதிலை என்ன புதினம் என்ற அம்மாவை அர்த்தம் விளங்காமல் பார்த்தாள்

அப்பிடியெண்டால் நாங்கள் ஏன் எங்கடை ஒட்டகப்புலம், பலாலிக் காணியளுக்கு போகேலாதெண்டு சொல்லுகினம்’  இதுவரையில் அவள் அதிசயமாகப் பார்த்த பார்வையின் அர்த்தம் இப்போது விளங்கியது.

இப்பவும் ஒட்டகப்புலக் காணியையும் பலாலிக் காணியையும் தங்கைச்சிக்கு சீதனம் குடுக்கப்போறன் எண்டுதான் கொம்மா சொல்லித் திரியிறா என்று அப்பா என்னைப்பார்த்து சிரித்த சிரிப்பின் அர்த்தமும் விளங்கவில்லை.

  &&&&&                                                              &&&&&                                                 &&&&&

 ’எப்பிடித்தம்பி பயணங்கள்? அண்ணா குடும்பம் கனடாவிலை இறங்கியிட்டினமாமோ?

ஊருக்குத் திரும்பிய மறுநாள் காலை சம்பிரதாயமான கேள்விகளோடு குலத்தார் வந்தார். வழமையான உரையாடல் முடிந்து, வந்த விடயத்திற்கு வந்தார்.

தம்பி இண்டைக்கு இரண்டு மணிக்கு ஒரு கூட்டமிருக்குதாம். கொழும்பிலை இருந்து ஆரோ பெரியாக்கள் வருகினமாம். நேற்று காம்பிலை இருந்து வந்து தேடினவை. கட்டாயம் வரச்சொன்னவை, உமக்கும் பயணக்களைப்பு, நீர் போனால் நானும் வருவம் எண்டு நினைச்சனான், என்ன செய்வம் ?  

 மறுக்க முடியவில்லை, மறுக்கமாட்டேன் என்பது அவருக்கும் தெரியும். எனக்கும் ஏற்கனவே தொலைபேசியில் விடயம் சொல்லப்பட்டிருந்தது.

கூட்டம் இரண்டரை மணிக்குத் தொடங்கியது. பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் நூறு பேர் வரையில் வந்திருந்தார்கள். கொழும்பில் இருந்து இரு உயர்நிலை அதிகாரிகள் வந்திருந்தார்கள். இருவரும் சிங்களத்தில் பேசினார்கள், கூடவந்திருந்த உரைபெயர்ப்பாளர் ஒருவர் தமிழில் மொழிபெயர்த்தார்.

பேச்சுக்கள் ‘வடக்கு கிழக்கு பகுதியில் சுதந்திரம் இல்லாத நிலையே அன்று காணப்பட்டது. ஆனால் இன்று மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய வகையில் நாட்டை மீட்டெடுத்துள்ளோம்;. அபிவிருத்திக்காக இப்பிரதேச மக்களுக்கான சகல தேவைகளும் பெற்றுக்கொடுக்கப்படும்.’ என்ற விதமாக இருந்தது.

கூட்டத்தில் இருந்த போது என் தொலைபேசி பல தடவைகள் அமைதியைக்குழப்பாமல் அதிர்ந்தது. அம்மா எடுத்திருந்தார். மண்டபத்திலிருந்து இடையில் வெளியேற மீண்டும் அதிர்ந்தது.

அம்மா! சொல்லுங்கோ

தம்பி! என்னத்தைப் பற்றிக் கூட்டம் நடக்குது, காணிக்கூட்டமே?

இல்லை, ஏன் காணிக்கு என்ன கூட்டம்?’

எங்கடை ஒட்டகப்புலம், பலாலி காணியெல்லாம் உரிமையாளரை அடையாளங்காண முடியயில்லை எண்டு சொல்லி பிடிக்கப்போகினமாம். காணியளுக்கை நோட்டீஸ் ஒட்டுகினமாம். நாங்கள் ஊரிலை இருக்கிறம் எண்டு சொல்லி ஒருக்கால் கதை.’

உரைகள் முடிந்த பின் பொதுமக்கள் அபிப்பிராயங்கள் கலந்துரையாடப்பட்டன. பலர் கேள்விகள் கேட்டார்கள் இன்னும் ஆறாத வடுக்கள் தீராத வேதனைகளோடு, முழுநாடுமே ஒன்றுசேர்ந்து துடைக்கவேண்டிய துயரங்களோடு, சமூகத்தின் ஒருபகுதி வாழ்ந்துகொண்டிருக்கிறது என்ற செய்தி அத்தனை கேள்விகளிலும் இருந்தது.

காணி சுவீகரிப்புப் பற்றி ஒருவர் கேட்க ‘சட்ட விரோதமாக எதுவும் நடக்காதுஎன்ற உறுதி மொழி கிடைத்தது. நான் அமைதியானேன்.

தனியார் காணிகளில் புத்தர் சிலைகள் பற்றி இன்னொருவர் கேட்கஅர்ப்பணிப்பாலும் தியாகத்தாலும் கட்டி எழுப்பப்பட்டுள்ள ஐக்கியத்தை எவரும் சீர்குலைக்க இடமளிக்கப் போவதில்லை. சிலர் பௌத்தர், இந்துக்கள், இஸ்லாமியர், கிறிஸ்தவர் என மக்களைப் பிரித்துப் பார்க்கின்றனர். அப்படிப் பிரிந்து நின்று செயற்பட முடியாது.’ என்ற பதில் திணறடித்தது.

அதன்பின் எல்லோருக்கும் எல்லாமே விளங்கிவிட்டது போலும். கேள்விகள் இல்லை.

நிகழ்வு தேசியகீதத்துடன் நிறைவு பெற்றது. இந்துக்கல்லூரித் தமிழ் மாணவிகள் சிங்களத்தில் பாடினார்கள். தாய் நாட்டின் பெருமையைப் பாடுகிறோம் என்பது அவர்களுக்கும் கூட்டத்திற்கு வந்திருந்த பலருக்கும் விளங்கவில்லை. தாய் நாட்டின் பெருமையினை தாய் மொழியில் பாடிப் பெருமைப்பட அவர்கள் விரும்பியிருப்பார்களோ தெரியவில்லை. அவர்கள் விரும்பாவிட்டாலும் தாய் மொழியில் பாடவும், தனது ஊரில் குடியேறவும் வேறு யாரேனும் விரும்பக்கூடும். அது கிடைக்காத போது தாய்  மொழியில் பாடக்கூடிய, தனது ஊரில் குடியேறக்கூடிய ஒரு நாட்டை விரும்பலாம் என்று தோன்றியது.

 கூட்டம் முடிந்து வெளியே வந்தபோது குலத்தார் ஒரு விதமாகச் சிரித்தார்.

ஏனண்ணை சிரிக்கிறியள்

இந்தமண் மேடுபள்ளமாய், கரடுமுரடாய் கிடக்குது. இதைப்பண்படுத்தி பசுமையாக்க இவை ஒருத்தருக்கும் விருப்பம் இருக்கிற மாதிரித் தெரியேல்லை. இப்பிடியே போனால் இனியும் இந்த மண்ணிலை முட்செடிகள் முளைக்கலாம்.

சொல்லி விட்டும் சிரித்தார்.

(நிகழ்காலம் தழுவிய கற்பனை)

(இக்கதை பரிசு பெற்ற மூலக்கதையிலிருந்து மீள்வடிவமைக்கப்பட்டது)

 

  • வரணியூரான் (ஜுனியர்)                                                                                03.03.2014

 

 

 

 

Advertisement

Comments are closed.