‘மனிதநேயர்’ அமரர் செல்லத்துரை செல்வராசா அவர்களிற்கு அளவெட்டி அழகொல்லை விநாயகர் ஆலயத்தின் அஞ்சலி

img_1450‘மனிதநேயர்’ அமரர் செல்லத்துரை செல்வராசா அவர்களிற்கு அளவெட்டி அழகொல்லை விநாயகர் ஆலயத்தின் அஞ்சலிச் செய்தி

‘மனிதநேயர்’ அமரர் செல்லத்துரை செல்வராசா அவர்கள் அளவெட்டியின்  வரலாற்றில் பொன் எழுத்தக்களால் பொறிக்கத்தக்க வகையில் வாழ்ந்து இன்று இறைத்துவம் பெற்றுள்ளார்.

தனது இளமைக்காலத்தில் கல்வி விளையாட்டு கலைகளில் ஆர்வம் மிகுந்தவராகத் திகழ்ந்த இவர் ஓருசிறந்த நாடகக் கலைஞருமாவார். அளவெட்டி அருனோதயாக் கல்லூரியில் (1967 ஆம் ஆண்டுகளில்) சிறப்பாகப் பேசப்பட்ட நாடகம் யாழ்ப்பாண இராசதாணியின் இறுதி மன்னான வீரசங்கிலியனின் வரலாற்று வெளிப்படுத்தும் ‘சங்கிலியன்’ நாடகமாகும். இந்நாடகத்தில் சங்கிலியனாக நடித்து நாடகத்திற்கு உயிரோட்டத்தைக் கொடுத்தவர் அமரர் செல்வராசா அவர்களே அன்றுமுதல் ‘சங்கிலியன்’  செல்வராசா என்கின்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டவர். அன்று அவரிடம் வேரூன்றிய தமிழ்ப்பற்று, சமயப்பற்று, தன்மான இனப்பற்று, அஞ்சாமை, மிடுக்கு, பேச்சாற்றல், தற்துணிவு என்பன அவர் இறைத்துவம் அடையும் வரையும் நிலைத்திருந்து அவரை வீரசங்கிலியனாக வாழவைத்ததைக் காணமுடிந்தது.

img_1446தமது குல தெய்வமான விநாயகப் பெருமான் மீது கொண்ட பற்றுடன் கூடிய நம் பிக்கையினால் புலம்பெயர்ந்து தான் வசித்த இலண்டன் நாட்டிலே ‘இல்போர்ட்டிலே’  செல்வவிநாயகரிற்கு ஆலயம் அமைத்தது. ஆலயத்தின் ஸ்தாபராயும் அறங்காவலராயும்  திகழ்ந்ததுடன் மட்டுமல்லாது இன்று பெயர் சொல்லத்தக்க ஆலயமாக அதனை ஆக்கியதுடன் தனது ஆலயத்தின் ஊடாக லண்டனில் சைவத்தையும்,தமிழையும் வளர்த்ததுடன் ஆலயத்தின் வருமானத்தில் ஒருபகுதியை தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் அறப்பணிக் கைங்கரியத்திற்கு கொடுத்தார். இன்று தமிழ்நாட்டிலிருந்து கருங்கற்களை தருவித்து கற்றளி கோயிலாக இவ்வாலையத்தை கட்டுகின்ற திருப்பணியையும் ஆரம்பித்து வைத்தும் உள்ள சிறப்புக்குரியவர்.

தமிழ் மொழியின் மீதுமீது கொண்ட பற்றின் காரணமாக லண்டன் உலகத்தமிழியல் ஆய்வு மையத்தை தனது சொந்த முயற்சியினால் நிறுவியதுடன் நின்றுவிடாது  பல லட்சம் பவுண்சுக்கு மேல் தனது செந்தப் பணத்தினைச் செலவு செய்து தமிழ் உலகமே மெச்சத்தக்க வகையில் தமிழயல் மகாநாட்டை  வியந்து, மெச்சும் வகையில் நடாத்தி முடித்தவர். இம்மகாநாட்டிற்காக உலகெங்கும் இருந்து பல தமிழ் அறிஞர்களை வரவழைத்து அவர்களின் ஆழ்ந்த தமிழ் அறிவை புலம்பெயர்ந்ந்து வாழும் தமிழ் மக்கள் பருக வழிசெய்தார்.  புலம்பெயர் தேசத்தல் தமிழர் பெருமை நிலை பெறத்தக்க வகையில்  1991 களில் யாழ்ப்பாணத்தில்  நடைபெற்ற மேதினப் பேரணி போன்று மாபெரும் ஊர்தி பவனியையும் அம்மாநாட்டில் நடாத்திய பெருமைக்குரியவர்.

img_1442‘நம்நாடு’  வாரப் பத்திரிகையை தனித்து ஆரம்பித்து. தாயகத்தின் உண்மைநிலைகளை வெளிக்கொண்டுவந்ததுடன் இப் பத்திரிகையூடாக சர்வதேசத்துக்கு ஈழத்தவரின் அல்லல்களையும், அவலங்களையும் அச்சமின்றி கட்டுரைகள் வடிவிலும், ஆசிரியர் தலையங்கங்கள் ஊடாகவும் ஊடகதர்மத்துடன் எழுதி உலகிற்கு உண்மையை வெளிப்படுத்திக் காட்டிய சிறந்த பத்திரிகை ஆசிரியர், ஊடகவியலாளர் இவராவார்.

எம்மண்ணின் மனிதப் பேரவலங்களை ஐ.நா வரை சாத்வீகமாக எடுத்துச்சென்று குரல் கொடுத்த வீரத்தமிழ்மகன் புலம்பெயர் உலக அரங்கில் தமிழ்மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தவர். பலவேறு தொலைக்காட்சிகளில் சிறந்த முறையில் தர்க்க ரீதியாகப் பேசுவதிலும், ஆன்மீகத்துடன் கலந்த அரசியல் பேசுவதிலும் சாணக்கியராகவும், மிகவும் கம்பீரமும் ஆணித்தரமாகவும புன்னகையுடன் பேசும் ஆற்றல் கைவரப் பெற்றவராகவும் திகழ்ந்தவர்.

img_14452013ஆம் ஆண்டு பிரித்தானிய சைவத்திருக்கோயில்கள் ஒன்றியத்தின் தலைவராக இருந்த காலத்தில் இவரின் தலைமையில் நடைபெற்ற சைவ மகாநாடானது சைவத்தின் பெருமையை விவேகானந்தரிற்குப் பின்னர் உலகிற்குப் புலப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. என்று பேசத்தக்க அளவிற்கு உயர்வாகக் கணிக்கப்பட்டது.

இவர் புலம் பெயர்ந்து இலண்டனில் வாழ்ந்தாலும் இமைப்பொழுதும் தாயகக் கனவினை இதயத்தில் கொண்டவராகவும் தாயகத்து மக்களுக்காக தன்னை அர்ப்பணித்தும் வாழ்ந்தவர். 2004 ஆண்டு ஆழிப்பேரலை இலங்கையை தாக்கியகாலத்தில் இவரது சேவைத்தளமானது கிழக்கிலங்கையில் அடித்தளமிட்டது. சைவத்தமிழ்ப் பற்றுடைய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அவர்களுக்கு ஊடாக மக்களின் தேவைகளை இனங்கண்டு சேவையாற்றத் தொடங்கிய இவர் இன்றுவரை தனது செயற்பாடுகளை கிழக்கிலங்கை முழுவதும் பரவலாக  ஆற்றிவருகின்றார்.

Final2009ஆம் ஆண்டு வன்னி மனிதப் பேரவலத்தின் பின்னர் அகில இலங்கைச் சைவமகா சபையுடன் இணைந்து வடக்கிலும், கிழக்கிலும், மலயகத்திலும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலவேறு வாழ்வாதாரப் பணிகளை முன்னெடுத்துள்ள செல்வராசா ஐயா அவர்கள் கடந்த சில மாதங்களின் முன்னர் தனது தாயகத்திற்கு வந்த சந்தர்ப்பத்திலே எமது மக்களிடத்தில் சுய பொருளாதார தன்நிறைவை ஏற்படுத்தல் வாயிலாக எமது உரிமையைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதில் தெளிவாக விளங்கிய ஐயா தனது சொல்லுக்கு ஏற்றதாக செயற்பாடுகளை ஆரம்பித்தார். இதனொரு அங்கமாக பெண்தலைமைத்துவக் குடும்பங்களிற்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் வாழ்வாதார விருத்தியை வழங்கும் வகையிலும், புற்று நோயிலிருந்து மக்களைக் காக்கும் வகையிலுமான இயற்கை வேளாண் செய்கைப் பண்னைகளை ஆரம்பிப்பதை நோக்கமாகக் கொண்டு வடக்கின் மையபூமியாகிய மாங்குளத்திலே ஆரம்பகட்டப் பணிகளை மேற்கொன்டிருந்தார்.

2017ஆம் ஆண்டில் ‘செல்வவிநாயகர் அறக்கட்டளை நிதியத்தினை’ ஆரம்பித்து அதனூடாக தாம் தாயகத்தில் தங்கியிருந்து சேவைசெய்வதை தனது இறுதிக்கால இலக்காகக் கொண்டு பலவேறு செயற்றிட்டங்களை ஆரம்பிக்கத் தொடங்கியிருந்தார்.

யாழ்குடாநாட்டின் நன்னீரின் இருப்பைத் தக்கவைப்பதனை நோக்காகக் கொண்டு  வழுக்கை ஆற்று வேலைத்திட்டத்தினை புலம்பெயர் சமூகத்தின் துணைக்கொன்டு அரச பங்களிப்புடன் முன்னெடுப்பதில் ஆர்வம் கொண்டு அதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டதுடன்.

அளவெட்டி அருணோதயக் கல்லூரியை அதியுயர் கணனி வலைத்தொடர்பு நுட்பமுடைய மாதிரிப் பாடசாலையாக மாற்றியமைத்தல் வேலைத்திட்டத்திற்குரிய ஆரம்பகட்ட வேலைகளையும் பூர்த்தியாக்கியிருந்தார்.

அழகொல்லை விநாயகர் ஆலயத்தில் பல்நோக்குமண்டபம் ஓன்றினை அமைத்தல் வேலைத்திட்டமானது ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றமையும் இம் மண்டபத்தின் மூலம் கிடைக்கப் பெறுகின்ற நிதியினைக் கொண்டு கற்றலுக்கு வறுமை தடையாக உள்ள மாணவர்களுக்கும், வலிவடக்கு அறநெறிப்பாடசாலைகளில் கற்பிக்கின்ற ஆசிரியர்ளுக்கான  ஊக்குவிப்புக் கொடுப்பனவுகளை மேற்கொள்ளுதல் செயற்பாடுகளையும் ஆற்றுவதை நோக்கமாக் கொண்டு ஆரம்பித்தார்.

நூற்றாண்டு விழாவினை 2017 ஆம் ஆண்டு கொண்டாடவுள்ள அளவெட்டி சைவ வாலிப சங்கத்தின் ‘நூற்றாண்டு விழா அலங்கார வளைவுகளை’ அளவெட்டிக் கிராமத்தின் வாயில்களில் அளவெட்டியின் சைவத் தமிழ்ப் பாரம்பரிய அடையாளங்களுடன் நிலையாக  நிறுவுதல், அளவெட்டியின் ஒவ்வொரு சைவர்களது வீட்டின் முன்பும் நந்திக் கொடிகளைக்கட்டி எழுச்சிப்படுத்தல் முதலாய பல திட்டங்களையும் தாயாரித்திருந்தார்.

தனது குலதெய்வமான மயிலாந்தர்வளவு ஞானவைரவர் ஆலயத்தினை கம்பீரத் தோற்றத்துடன் அமைத்தல் வேண்டுமென்ற ஆசையின் வெளிப்பாடாக தனது சகோதரி திருமதி. சே.கருணேஸ்வரி அவர்களுடன் இணைந்து இச் செயற்றிட்டத்தை முன்னெடுத்து தொடங்கியிருந்தார்.

யுத்தத்தினால் முற்றாக அழிக்கப்பட்ட அளவெட்டி சினன் கலட்டி ஞானோதய வித்தியாலயத்தின் மீள்கட்டுமானத்தின் ஆரம்பகட்ட வேலைகளை முன்னெடுப்பதற்கு தன்னால் இயன்ற பங்களிப்புகளை முதன்முதலாக மேற்கொன்டவர்.

அளவெட்டி வடக்கு அருள்மிகு பூரணி, புட்கலாதேவி சமேத ஜயனார் தேவஸ்தானத்தினுடைய திருப்பணி வேலைகள் தொடர்பாக பார்வையிட்டதுடன்  ஆக்கபூர்பமான பங்களிப்பினை செய்வதற்கான உறுதியும் கொண்டிருந்தவர்.

தாயகத்திற்கு வந்து தனது உறவுகளை சந்தித்ததுடன், 20 ஆண்டுகளின் பின்னர் அழகொல்லை விநாயகரின் தேரோட்டக்காட்சியை கண்குளிரக் கண்ட ஆன்மதிருப்தியுடன், தனது குலதெய்வமான மைலாந்த வளவு வைரவர் மண்டபத்தில் அமர்ந்திருந்து இளைப்பாறிய மனநிறைவுடனும், தனது இவ்வுலக வாழ்க்கையிலிருந்து வீடுபேறுபெற்று செல்வவிநாயகரது திருத்தாழ்களைச் சரண்புகுந்து நித்திய பேரானந்தவாழ்வு பெற்றுச் சென்றுள்ளார்.

தன் வாழ்நாள் முழுதும் சமயத்திற்கும் சமூகத்திற்கும் உயரிய மனிதநேய தொண்டுகள் புரிந்த அறக்கொடையாளராகிய செல்வராசா (செல்வா) ஐயாவிற்கு அகிலஇலங்கைச் சைவமகாசபை தமது அதியுயர் விருதாகிய மனித நேயர் விருதினை அறப்பணி அன்னை தங்கம்மா அப்பாக்குட்டி, கருணைப்பாலத் தந்தை ஆ.சி.நடராசா, பொறியியலாளர் ராம் சுப்பிரமணியம் ஆகியோருக்கு அடுத்து வழங்கிக்கௌரவப்படுத்திறிருக்கின்றமை அவருக்குமட்டுமல்லாது அளவெட்டிக் கிராமத்திற்கும், அவர்தம் குடும்பத்தவர்களுக்கும் பெருமையை அளிக்கின்றதாக அமைகின்றது.

அன்னாரது இழப்பு அவரது குடும்பத்தவர்களுக்கும், அளவெட்டிக் கிராமத்திற்கும், சைவத்தமிழ்ப் பேருலகத்தவர்களுக்கும் ஈடுகொள்ள முடியாத பேரிழப்பாக அமைந்து விட்டது. அவரது இழப்பால் துயருறும் குடும்பத்தவர்களுக்கும் உறவுகளிற்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தினைத் தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போமாக.

அழகொல்லை விநாயகர் ஆலய தர்மபரிபாலனசபை, தொண்டர்சபை, முன்பள்ளி, அறநெறிப்பாடசாலை – ஆகியவற்றின் சார்பாக

தாயுமானவர் நிகேதன்

தலைவர்,

அழகொல்லை விநாயகர் ஆலய தர்மபரிபாலனசபை,

அளவெட்டி.

17.09.2016

 

Advertisement

Comments are closed.