கும்பழாவளை
கும்பழாவளை விநாயகர் ஆலயம் அளவெட்டி ஆலயங்கள் நிரம்பிய கிராமம் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. விநாயகர் ஆலயங்கள் சிவாலயங்கள் அம்மன் ஆலயங்கள் ஐயனார் ஆலயங்கள் நரசிங்க வைரவர் ஆலயம் விஷ்ணு ஆலயம் வீரபத்திரர் முதலியவேள் ஆலயம் அரசடி வைரவர் ஆலயம் தாமர்வளவு வைரவர் ஆலயம் என பலவகைப்பட்ட ஆலயங்கள் அளவெட்டிக் கிராமத்தில் உள்ளன. அவை பற்றி எல்லாம் குறிப்பிடுவதற்கு இந்நூல் இடந்தராது. எனினும் இக்கிராமத்தில் உள்ளதும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததுமான ஆலயங்கள் பற்றி பார்க்கவேண்டியது அவசியமானதாகும்.
அந்த வகையில் கும்பழாவளை ஆலயம் கூட்டுறவாளர் வீதியில் கேணிக்கரை வைரவர் ஆலயத்திற்கு மேற்காக அங்கிருந்து நூற் றைம்பது மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. சோழ இளவரசியாகிய மாருதப்புரவீகவல்லியின் குதிரை முகம் அரச குமாரத்தி கண்ணுக் குத் தெரியாது மறைந்த இடம் அளவெட்டி கும்பழாவளை விநாயகர் ஆலயமென கர்ணபரம்பரைக் கதையுண்டு. குதிரை முகம் முற்றாக நீங்கப்பெற்றதால் அவ்விடத்திற்கு மாவிடுதிட்டி என்னும் பெயர் இன்றும் வழங்கக் காண்கின்றோம். இப்பெயர் முதலில் மாவிழி திட்டி என்ற பெயருடன் இருந்ததெனவும் அது மருவி மாவிடுதிட்டியென ஆயிற்றெனவும் கூறுவாருமுளர். மா -விழி – திட்டி என்பது குதிரைமுகம் இழிந்த திட்டியெனப் பொருள் படும். இழிதல் நீக்குதல் என்ற பொருளுடைத்து இவ்வாலயத்தின் தென்கிழக்கு மூலையில் குமாரத்தி திருக்குளமும் வயல் நிலமும் இருந்ததாக அறிந்தோர் வாய்க்கேட்டோர் உரைப்பர். இத்தலம் அரச குமாரத்தி வரு கைக்கு முன்னரே இருந்ததெனவும் அவள் தாபிக்கவில்லை புதுப்பித்தாளே என வாதிடுவோருமுளர். இவ்வாலயப் பகுதி ஒரு மண்மேடாக இருந்ததெனவும் இப்பகுதியில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த சிறுவனுக்கு ஒரு சோதி வடிவான பிழப்பு தோன்றியதெனவும் அந்த இடத்தில் கொம்பை ஏந்தியபடி விநாயகர் காட்சியளித்தார் எனவும் கொம்பு+ஆவளை என்பது கொம்பழாவளையாய் மாறி அது மக்கள் வாயிற் திரிந்து கும்பழாவளை ஆயிற்றெனவும் அறிஞர் சாதிப்பர். பசுக்கள் கும்பலாக நின்று மேய்ந்த இடம் கும்பலாவளை (கும்பல் + ஆவளை) கும்பழாவளையாய் மரு விற்று என்பதும் ஒன்று. போர்த்துக்கேயர் காலத்தில் இவ்வாலய அன்பர்கள் மூல விக்கிரகத்தை எடுத்துச் சென்று ஒரு மாமரப் பொந்தில் வைத்து வழிபாட்டார் எனவும் ஆங்கிலேயர் காலத்தில் அது மீளவும் தாபிக்கப்பட்டதாகவும் பழைய கதையொன்று உண்டு.
1811ம் ஆண்டு இவ்வாலயக் கர்ப்பக் கிரகமும் மகா மண்டபமும் கட்டப்பெற்றன. இதற்குரிய சாசனம் ஒல்லாந்த காலத் தோம்பில் உண்டு. 1847ஆம் ஆண்டில் எழுதுப்பட்ட தோம்பில் இவ்வாலய மூலஸ் தானம் கற்களால் கட்டப்பட்டு இதன் பரிபால கர்களாக இராசதுங்க முதலியார் பழனிப்பிள்ளை என்பவரும், இராமலிங்க ஐயர் சுப்பையர் என்பவரும் விளங்கினர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 1893இல் குமார நன்னியர் என்பவர் கிராம மக்களிடம் பொருள் சேர்த்து அர்த்த மண்டபம் வரை கட்டி முடித்தார். 1903இல் மகாமண்டபம் ஆரம்பிக்கப்பட்டு 1911இல் பூர்த்தியாக்கப்பட்டது. மூலஸ்தா னத்திலுள்ள தூபி மிக நுட்பமான சித்திர வேலைப்பாடுகளுடன் அப்போது கட்டப்பட்டு இப்போதும் காட்சி தருகின்றது. இத்திருப்பணி களுக்கான சாசனம் ஆலய மண்டப முதற் சுவரில் உண்டு. 1948ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆலய நிர்வாகச் சீர்கேடுகளினாலும், கிராமத்தில் ஏற்பட்ட பிளவுகளாலும் ஆலய நிர்வாகம் பற்றிய சர்ச்சை நீதிமன்றம் வரை சென்றது. நீதிமன்றத் தீர்ப்பின்படி 7 பேர் கொண்ட தர்மகர்த்தார்கள் சபை நிறுவப்பட்டு இன்றுவரை இயங்கி வருகிறது. தர்மகர்த் தாக்களின் கீழ் பல வளர்ச்சிகளை இவ்வாலயம் கண்டது. 1949இல் புனருத்தாரண கும்பாபி ஷேகம் நடைபெற்றது. 1953இல் 3 தளங்களைக் கொண்ட கோபுரமும், மணிக்கூட்டுக் கோபுர மும் கட்டுவதற்கு அத்திவாரமிடப்பட்டபோதும் அவை 1962ஆம் ஆண்டிலேயே பூர்த்தி செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் செய்யப் பட்டது. 1966இல் திருமதி. பாக்கியம் துரை யப்பா அவர்களால் முகப்பு மண்டபம் கட்டப்பட்டது. 1970இல் சிங்கப்பூர் சின்னப்பு தம்பதியரால் 3 தேர்கள் விடக்கூடிய ஓர் தேர்முட்டி அமைக்கப்பட்டது. 1979இல் இத்தேர் முட்டி ஊர்பொதுமக்களின் பண உதவியோடு ஓர் தேர்க்கொட்டகையாக அமைக்கப்பெற்றது. 1984இல் ஆலயத்தின் தெற்குப் பகுதியில் வீதிக்கு அண்மித்ததாக தீர்த்தக்குளம் ஒன்றும் நீராடல் மண்டபம் சுவாமி இருக்கும் மண்டபம் என்பனவும் அமைக்கப்பட்டன. நீராடல் மண்டபம் திருமதி. சோ. நாகம்மா குடும்பத்தினராலும் மற்றைய மண்டபம் திரு.ஆ.சின்னையா குடும்பத்தினராலும் அமைக்கப்பட்டன. 2002ஆம் ஆண்டு யுத்த அனர்த்தத்தினால் சேதமுற்றிருந்த பல திருத்தவேலைகள் திருப்பணிச்சபை என்ற சபை மூலம் நிறைவேற்றப்பட்டு கும்பாபிடேகமும் நடைபெற்றது. இப்புனரமைப்புக்கு நிதி உதவியோர் பலராவர். சிலர் முக்கியமான சில வேலைகளைப் பொறுப்பேற்று முடித்துத் தந்துள்ளனர். யாகமண்டபம் திரு.பொ.சண்முகராசா அவர்களாலும் நால்வர் மண்டபம் திரு.க. சிவலிங்கம் குடும்பத்தினராலும் சண்டேஸ்வரர் கோயில் திரு.அ.விஸ்வநாதன் குடும்பத்தினராலும் முகப்பு மண்டப புனரமைப்பு திரு.மா.மயில்வாகனம் குடும்பத்தினராலும் வசந்த மண்டபம் திரு.க. வேலுப்பிள்ளை குடும்பத்தினராலும் மணிக்கூட்டுக் கோபுரம் கண் வைத்தியர் செல்வநாயகமூர்த்தி அவர்களாலும் புனரமைக்கப்பட்டது. இவற்றைவிட பல சிறிய திருப்பணிகளும் வாகனங்களும் ஏனைய பொருட்களும் அன்பர்களினால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன. இவ்வாலயத்தின் மகோற்சவம் வெகுவிமரிசையாக வருடந்தோறும் வைகாசி மாதத்தில் நடை பெற்று வருகின்றது. மகோற்சவ காலங்களில் கலை நிகழ்ச்சிகள் விமரிசையாக நடைபெறும். காலஞ்சென்றவர்களான தவில்வித்துவான் ராகவன் நாதஸ்வர வித்துவான்கள் இராசரத்தினம்பிள்ளை அருணாசலம் பிள்ளை கோட்டூர் இராசரத்தினம்பிள்ளை லயஞான குபேரபூபதி தட்சணாமூர்த்தி மற்றும் ஷேக் சின்னமௌலானா உட்பட இந்திய புகழ்பெற்ற கலைஞர்களும் இவ்வாலயத்தில் நாதகான மழை பொழிந்துள்ளனர். திருவிழாக்கள் போட்டி மனப்பான்மையோடு சிகரங்கள் வாழைக்குலைப் பந்தல்கள் மின்வெளிச்சங்கள் வானவேடிக்கைகள் சின்ன மேளங்கள் என கலகலப்பாக நடந்துள்ளன. வில்லுப்பாட்டு. கதாப்பிரசங்கம் சொற்பொழிவு சங்கீதச் கச்சேரிகள் என்பனவும் ஆலயவிழா நாட்களில் நடைபெற்று வருகின்றன. இவ்வாலயத்தின் வளர்ச்சியிலும் பராமரிப்பிலும் ஆலயத் தொண்டர் சபையினர் ஆற்றிவரும் பங்களிப்பு மறக்கற்பாலது. இவ்வாலயத்தின் மேலதிக சிறப்புக்களை திருமதி. கல்யாணி லோகநாதன் எழுதிய “கும்பழாவளை விநாயகர் ஆலய தலவரலாறு” எனும் நூலில் காணலாம்.
ஆலயத்தின் அந்தணர்களாக இறைபணி ஆற்றியவர்களுள் இராமலிங்கக் குருக்கள் மற்றும் முருகையாக் குருக்கள் ஆகியோர் முதன்மையானவர்கள். பின்னர் இராம லிங்கக் குருக்களின் பிள்ளைகள் சோமசுந்தரேஸ்வரக் குருக்கள் விஸ்வேஸ்வரக் குருக்கள் சூரி ஐயா முரளி ஐயா ஆகியோர் அந்தணர்களாகப் பணியாற்றினர். இவர்களின் பின் தற்போது சோமசுந்தரேஸ்வரக் குருக்களின் புதல்வர் குமாரதாசக் குருக்கள் ஆலய பிரதம குருவாக இருந்து ஆலயத்தைச் சிறப்பாக வழி நடத்துகின்றார். கும்பழாவளை பிள்ளையார் ஆயல வளர்ச்சியில் ஆலயத்தின் தொண்டர் சபையினர் ஆற்றிவரும் பணியும் முக்கிய இடம்கொள்ளத்தக்கதாகும்.
தர்மகர்த்தா சபைத் தலைவர்கள்
- 1948 – 1983 திரு. செ. மயில்வாகனம்
- 1984 – 1993 திரு. ச. நாகநாதர்
- 1994 – 1995 திரு.இ.இராமச்சந்திரன்
- 1996 – 2001 திரு.செ. சச்சிதானந்தம்
- 2002 – 2004 திரு. சொ. சிவப்பிரகாசம்
- 2005-2006 திரு.செ. செல்வநேசன்
- 2006-2007 திரு.செ. வேலாயுதபிள்ளை
- 2007 – இன்றுவரை திரு.ம. பத்மநாதன்
தொகுப்பு :
ஆசிரியர் மு. செல்லையா